16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், மலேசிய அரசு திங்கள்கிழமை முதல் புதிய அதிரடிச் சட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இப்புதிய விதிகளின்படி, முகநூல் , இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட அனைத்து முக்கிய சமூக வலைத்தளப் பக்கங்களையும் பயன்படுத்துவதற்கு முன்பு வயது சரிபார்ப்பு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் மனவளர்ச்சியைக் கெடுக்கும் தேவையற்ற உள்ளடக்கங்கள், இணையவழி மிரட்டல்கள் மற்றும் நீண்ட நேரம் ஆன்லைனில் மூழ்கியிருக்கும் ஆபத்தான பழக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த விதிகளை மீறிச் சிறுவர்களுக்குக் கணக்குத் தொடங்க அனுமதிக்கும் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ₹25 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சிறுவர்கள் ஏதேனும் வழிகளில் கணக்கைத் தொடங்கினாலும் அவர்களது பெற்றோருக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இணையப் பயன்பாட்டிலிருந்து குழந்தைகளை முழுமையாகத் தடுக்காமல், அவர்களைப் பாதுகாப்பான சூழலில் வைப்பதே தங்களது நோக்கம் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2025 டிசம்பர் 10 முதல் ஆஸ்திரேலியாவிலும், அதனைத் தொடர்ந்து பிரேசில், இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சமூக வலைத்தளப் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸிலும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடை மசோதா இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

இதற்கிடையே, மலேசிய அரசின் இந்த முடிவுக்குப் புகழ்பெற்ற ‘மெட்டா’ நிறுவனம் தனது கவலையைத் தெரிவித்துள்ளது. இத்தகைய கடுமையான தடைகள் காரணமாகச் சிறுவர்கள் பாதுகாப்பான செயலிகளை விடுத்து, எந்தவொரு கட்டுப்பாடும் கண்காணிப்பும் இல்லாத ஆபத்தான பிற இணையப் பக்கங்களை நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால் ஆன்லைன் ஆபத்துகள் குறையாமல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் மெட்டா நிறுவனம் எச்சரித்துள்ளது.