ஐரோப்பிய நாடான பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் இருந்து சுமார் இரண்டு மணி நேரத் தொலைவில் அமைந்துள்ள ‘ப்ரோஹோத்னா குகை’ (Prohodna Cave) உலக அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குகையின் கூரையில் இயற்கையாகவே மனித கண்கள் போன்ற வடிவில் இரண்டு பிரம்மாண்ட துளைகள் அமைந்துள்ளன. இதனால் இதனை உலக மக்கள் “கடவுளின் கண்கள்” (Eyes of God) என்று அழைக்கிறார்கள். பகல் நேரத்தில் சூரிய ஒளி இந்த துளைகள் வழியாக உள்ளே வரும்போது, வானமே குகைக்குள் எட்டிப் பார்ப்பது போன்ற ஒரு மாயாஜாலக் காட்சி அரங்கேறுகிறது.

​ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இயற்கை அரிப்பு மற்றும் சுண்ணாம்புப் பாறைகளின் மாற்றங்களால் உருவான இந்த குகை, மழைக்காலங்களில் மேலும் மர்மமாக மாறுகிறது. மழை பெய்யும்போது இந்த கண் போன்ற துளைகளில் இருந்து தண்ணீர் கீழே கொட்டுவது, கடவுளே நேரில் அழுது கண்ணீர் வடிப்பது போல தோற்றமளிக்கிறது.

எந்தவித நுழைவுக் கட்டணமும் இல்லாத, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 880 அடி நீள குகைக்குள் பங்கீ ஜம்பிங் மற்றும் ராக் கிளைம்பிங் போன்ற சாகசங்களும் அனுமதிக்கப்படுவதால், உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த இயற்கை அதிசயத்தைக் காண இங்கு குவிந்து வருகின்றனர்.