இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், ஏடிஎம்களில் தற்போது பெரும்பாலும் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே கிடைக்கின்றன. இதனால் அன்றாடத் தேவைகளுக்கான 10, 20 மற்றும் 50 ரூபாய் போன்ற குறைந்த மதிப்புடைய நோட்டுகளுக்கு பொதுமக்களிடையே பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், மத்திய அரசு ஏடிஎம்களில் 10 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய அதிரடி முடிவெடுத்துள்ளது. இதற்காக சிறிய மதிப்புடைய நோட்டுகளை மட்டும் வழங்கும் பிரத்யேக ஏடிஎம்களையும், பெரிய நோட்டுகளைச் சில்லறையாக மாற்றிக்கொள்ள உதவும் ‘ஹைபிரிட்’ ஏடிஎம்களையும் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது மும்பையில் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக, இந்திய ரிசர்வ் வங்கி சிறிய மதிப்புடைய நோட்டுகளை அதிகளவில் அச்சிடவும் முடிவு செய்துள்ளது.

இந்தச் சோதனை ஓட்டம் வெற்றியடையும் பட்சத்தில், விரைவில் நாடு முழுவதும் 10 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த முயற்சியானது சில்லறைத் தட்டுப்பாட்டைக் குறைப்பதோடு, சாமானிய மக்களின் அன்றாடப் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என நம்பப்படுகிறது.