கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் திருமணமான 45 நாட்களில் புதுப்பெண் காதலனுடன் ஓடிப்போனதால், மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரீஷ் என்ற இளம் விவசாயிக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மேலும் தொடக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்த இல்லற வாழ்க்கையில், தனது மனைவி திருமணத்திற்கு முன்பே ஒரு வாலிபரைக் காதலித்ததும், திருமணத்திற்குப் பிறகும் அவருடன் தொடர்பில் இருந்ததும் ஹரீஷுக்குத் தெரியவந்தது. இதனால் தம்பதியிடையே விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றார்.

இந்தத் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத ஹரீஷ், தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதத்தில், தனது மரணத்திற்கு மனைவி, மாமனார், மாமியார் மற்றும் மனைவியின் காதலன் ஆகியோரே காரணம் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தனது மனைவி தன் மீது பொய்யான புகார்களைக் கூறியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் அந்தக் கடிதத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தாவணகெரே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.