இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான ஐஐடி காரக்பூரில், மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதை தடுக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டில் மட்டும் பல மாணவர்கள் தங்களது ஹாஸ்டல் அறைகளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ஹாஸ்டல் அறைகளில் உள்ள பெரிய மின்விசிறிக்கு பதிலாக சிறிய அளவிலான, தற்கொலைக்காக பயன்படுத்த முடியாத வகையில் சிறிய மின்விசிறியை மாற்றும் திட்டத்தை நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.
இந்த முயற்சியின் பின்னணி குறித்து கூறிய இயக்குநர் சுமன் சக்ரபோர்த்தி, “மனநல சிக்கல்களுக்கு மாற்றாக இது இல்லை. ஆனால் சில நேரங்களில் திடீர் உணர்ச்சியில் தவறு செய்யும் முன், அப்பொழுது அந்த சாதனங்களை அணுக முடியாமல் இருப்பது மாணவனின் வாழ்க்கையை காப்பாற்றும்” என கூறினார்.
ஹாஸ்டல்களில் உள்ள 21 கட்டடங்கள், சுமார் 16,000 மாணவர்களை கொண்டுள்ளன. இத்திட்டம் கட்டுப்படியாக செயல்படுத்தப்படும் என்பதால், தற்காலிக காலக்கெடு வழங்க முடியாது எனவும் அவர் கூறினார்.
இதற்கு மேலும், மாணவர்கள் மனதளவில் உறுதியாக இருக்க, 24×7 ஆலோசனை சேவை, இரு மாதத்திற்கு ஒரு முறை பெற்றோருடன் நேரடி தொடர்பு, பெண்கள் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ‘காம்பஸ் அம்மாக்கள்’ எனப்படும் திட்டத்தின் கீழ் உணர்ச்சி வழிகாட்டிகளாக செயல்படுதல், மற்றும் நிரந்தர மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஹாஸ்டல் அறைகளின் கதவுகளில் ஹெல்ப்லைன் நம்பர் கொண்ட பார்கோட் ஒட்டப்பட்டு, அவசர நேரங்களில் மாணவர்கள் ஸ்கேன் செய்து ஆலோசனை பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்கொலை சம்பவங்களின் தொடர்ச்சியில், கடந்த ஜூலை 18-ஆம் தேதி நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர் ரிதம் மண்டல் ஹாஸ்டலில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார்.
அதற்கு முன், ஜனவரி 12-ஆம் தேதி ஷான் மாலிக், ஏப்ரல் 20-ஆம் தேதி அனிகேத் வாக்கர், மற்றும் மே 4-ஆம் தேதி முகம்மது ஆசிப் காமர் ஆகிய மாணவர்களும் தங்களது ஹாஸ்டல் அறைகளில் தற்கொலை செய்துகொண்டிருந்தனர். இச்சம்பவங்களைத் தொடர்ந்து 10 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மாணவர்களின் உயிரை பாதுகாக்கும் வகையில், ஐஐடி காரக்பூர் நிர்வாகத்தின் இத்தகைய முயற்சி சமூகத்தில் பாராட்டுக்குரியதாக இருக்கிறது.
