பெண்களுக்கு வளையல்கள் வாங்குவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கலே சரியான அளவைத் (Size) தேர்ந்தெடுப்பதுதான். நேரில் செல்ல முடியாத நேரங்களில் மற்றவர்களிடம் வளையல் வாங்கச் சொன்னால், அது பெரும்பாலும் கைகளில் நுழையாத அளவிற்குச் சிறியதாகவோ அல்லது கழன்று விழும் அளவிற்குப் பெரியதாகவோ அமைந்துவிடும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக, தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு எளிய ‘காயின் ட்ரிக்’ (Coin Trick) வீடியோ வைரலாகி வருகிறது.
50 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோவில், ஒரு சாதாரண நாணயத்தை வைத்து எப்படிச் சரியான அளவு வளையலை வாங்குவது என்பது விளக்கப்பட்டுள்ளது. இந்தத் தந்திரத்தின்படி, உங்களிடம் இருக்கும் சரியான அளவு வளையலின் நடுவில் ஒரு நாணயத்தை வைத்துப் புகைப்படம் எடுத்து, வளையல் வாங்குபவருக்கு அனுப்ப வேண்டும்.
அவர் கடைக்குச் சென்றதும், அதே மதிப்புள்ள ஒரு நாணயத்தை போனில் உள்ள அந்தப் புகைப்படத்தின் மேல் வைத்து, அதன் அளவிற்கு ஏற்றவாறு கடையில் இருக்கும் வளையல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் போதும். துல்லியமான அளவில் வளையல்களை வாங்கிவிடலாம். இந்த ஐடியாவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது ரொம்ப உபயோகமான டிப்ஸ்” என்றும், சிலர் கிண்டலாக “வளையல் வாங்கித் தர ஆள் இருந்தாத்தானே இந்த ட்ரிக் பயன்படும்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
