விகாஸ் பவனில் மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால் தலைமையில் விவசாயிகள் தின குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ‘மாத்ரு’ என்ற குரங்கு கூட்ட அரங்கிற்குள் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் தங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நுழைந்த அந்த குரங்கு நேராகச் சென்று மாவட்ட ஆட்சியரின் நாற்காலியிலேயே அமர்ந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர் அஸ்மிதா லால், சிரித்துக்கொண்டே குரங்கிடம் “உட்கார்” என்று கூற, அந்த குரங்கும் சிறிது நேரம் ஆட்சியர் இருக்கையிலேயே அமர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

​இந்த ‘மாத்ரு’ குரங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே மிகவும் பிரபலம் என்று கூறப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு போராட்டத்தின் போது, ஆட்சியர் அஸ்மிதா லால் தரையில் அமர்ந்து இந்த குரங்குடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சியர் நாற்காலியிலேயே குரங்கு அமர்ந்திருக்கும் இந்த சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, “குரங்குக்கே ஆட்சியர் நாற்காலியா?” என நெட்டிசன்களிடையே வேடிக்கையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.