மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான போர் தற்போது மிக பயங்கரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-4’ (Operation True Promise-4) திட்டத்தின் கீழ், இஸ்ரேல் மீது 65-வது கட்டமாகப் பிரம்மாண்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலின் மிக முக்கிய அம்சமாக, ஈரான் தனது அதிநவீன ‘நஸ்ரல்லா’ (Nasrallah) பாலிஸ்டிக் ஏவுகணைகளை முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஈரான் இலக்கு வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் நினைவாக இந்த ஏவுகணைக்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஈரானின் பழைய ‘காதர்’ ரக ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே இதுவாகும். இது ஒரு ‘பிரிசிஷன் கைடட்’ ஏவுகணை என்பதால், பாதுகாக்கப்பட்ட இலக்குகளைக்கூடத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இது ஒரே நேரத்தில் பல வெடிகுண்டுகளைச் சுமந்து சென்று, ஒரே அடியில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையோ அல்லது பல இடங்களையோ தரைமட்டமாக்கும். ஒலியை விட 5 மடங்கு வேகத்தில்  பாயக்கூடியது. இதனால் இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ (Iron Dome) அல்லது அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ (Patriot) பாதுகாப்பு அமைப்புகளை எளிதில் ஊடுருவிச் செல்லும்.

1500 முதல் 2000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கக்கூடியது. ஈரானிலிருந்து கொண்டே இஸ்ரேல் அல்லது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் துல்லியமாகத் தாக்க முடியும். புதிய வழிகாட்டுதல் தொழில்நுட்பம் மூலம் விமானப்படை தளங்கள், கட்டளை மையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களைக் கண்டறிந்து அழிக்கும்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் ஏவுகணை மற்றும் அணுஆயுதத் திறன் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதாகச் சமீபத்தில் கூறியிருந்தார். ஆனால், ஈரான் தொடர்ந்து 65 கட்டங்களாகத் தாக்குதல் நடத்துவதும், ‘நஸ்ரல்லா’ போன்ற புதிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதும், ஈரானின் ராணுவ உற்பத்தித் திறன் இன்னும் வலுவாக இருப்பதை உலகுக்குக் காட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.

ஈரானின் இந்தத் தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது வெறும் ராணுவ எச்சரிக்கை மட்டுமல்ல, ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சியின் சான்று எனப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த புதிய ஏவுகணையின் வருகை, மத்திய கிழக்கில் நீண்டகாலப் போருக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.