மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – ஜப்பான் பிரதமர் சனாய் தகைச்சி (Sanae Takaichi) இடையிலான சந்திப்பு வாஷிங்டனில் மார்ச் 19 அன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, ஜப்பான் பிரதமரை அவமதிக்கும் வகையில் ட்ரம்ப் பேசிய கருத்துக்கள் தற்போது சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், ஜப்பானிய செய்தியாளர் ஒருவர் ட்ரம்ப்பிடம் ஒரு நேரடியான கேள்வியை முன்வைத்தார். “ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, உங்கள் நெருங்கிய நண்பரான ஜப்பானுக்கோ அல்லது பிற நட்பு நாடுகளுக்கோ அமெரிக்கா ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? இதனால் நாங்கள் குழப்பத்தில் உள்ளோம்” என்று அவர் கேட்டார்.

இந்தக் கேள்விக்குத் தனது பாணியில் பதிலளித்த ட்ரம்ப், தாக்குதல்களைத் திட்டமிடும்போது ரகசியம் காப்பதே தனது நோக்கம் என்று கூறினார். தொடர்ந்து அவர் பேசியதுதான் ஜப்பான் தரப்பை அதிர்ச்சியடைய வைத்தது. “திடீர் தாக்குதல் (Surprise attack) பற்றி ஜப்பானை விட வேறு யாருக்கு நன்றாகத் தெரியும்? பேர்ல் ஹார்பர் தாக்குதல் பற்றி நீங்கள் ஏன் எங்களிடம் சொல்லவில்லை?” என்று கிண்டலாகக் கேட்டார்.

அதாவது கடந்த 1941-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி, ஹவாய் தீவிலுள்ள அமெரிக்கக் கடற்படைத் தளமான பேர்ல் ஹார்பர் மீது ஜப்பான் நடத்திய திடீர் விமானத் தாக்குதலில் 2,400-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தான் ட்ரம்ப் தற்போது ஜப்பான் பிரதமருக்கு முன்னால் ஒரு நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

ட்ரம்ப்பின் இந்தத் திடீர் விமர்சனத்தால் அருகில் இருந்த ஜப்பான் பிரதமர் சனாய் தகைச்சி மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளானார். முகத்தில் புன்னகையை வரவழைக்க அவர் போராடியது அங்கிருந்த கேமராக்களில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒரு நாட்டின் தலைவரை வைத்து இது போன்ற உணர்ச்சிகரமான வரலாற்றுச் சம்பவங்களைக் கிண்டல் செய்வது முறையற்றது எனப் பலரும் ட்ரம்ப்பை விமர்சித்து வருகின்றனர்.

அமெரிக்கா – ஜப்பான் இடையிலான உறவு இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிக நெருக்கமாக இருந்தாலும், ஹிரோஷிமா – நாகசாகி அணு குண்டு வீச்சு மற்றும் பேர்ல் ஹார்பர் தாக்குதல் போன்றவை இரு நாட்டு வரலாற்றிலும் ஆறாத வடுக்களாக உள்ளன. மேலும் இக்கட்டான இந்தச் சூழலில் ட்ரம்ப்பின் இத்தகைய பேச்சு, இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.