கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டி, ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றதுடன், அதை வெளியிடுவதாக கூறி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அவரது வீட்டின் அருகே 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். அந்த சிறுவனை பார்க்க அவனது பள்ளி நண்பர்கள் இருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். அப்போது அருகில் வசிக்கும் மாணவியை கவனித்த அவர்கள், அவரைப் பற்றிய தகவல்களை கேட்டுள்ளனர்.
அதற்கு, அந்த சிறுவன் மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு, பேஸ்புக் விவரங்கள் மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தி, மூவரும் சேர்ந்து போலியான இன்ஸ்டாகிராம் கணக்கொன்றை உருவாக்கி, அதன் மூலம் மாணவிக்கு நண்பர் கோரிக்கை அனுப்பியுள்ளனர். அதை மாணவி ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவரிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றியமைத்து அனுப்பிய அவர்கள், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமெனில் ஆடையின்றி புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்ப வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த மாணவி, அவர்கள் கூறியபடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து, மாணவியின் தந்தையின் செல்போன் எண்ணை கண்டுபிடித்த மாணவர்கள், WhatsApp மூலம் அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி, அவற்றை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் விசாரித்தபோது, அந்த மொபைல் எண் அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிறுவனுடையது என்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
