லண்டனில் நடைபெறும் ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், இந்திய உரிமையாளரைக் கொண்ட ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணி பாகிஸ்தான் வீரரை ஏலம் எடுத்ததற்கு இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு பாகிஸ்தானில் பிறந்த முன்னாள் வீரர் அசீம் ரபீக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணி, சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்றார் அகமதுவை ரூ. 2.23 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இது குறித்து கவாஸ்கர் தனது குறிப்பிட்டதாவது,

“பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், இறுதியில் அந்நாட்டு அரசுக்கு வரியாகச் செல்கிறது. அந்தப் பணம் ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்தப்பட்டு, மறைமுகமாக இந்திய வீரர்களின் உயிரிழப்பிற்கு வழிவகுக்கிறது. இந்திய நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டுக் கிளைகள் மூலமாகப் பாகிஸ்தான் வீரர்களுக்குப் பணம் வழங்கினாலும், அது இந்தியர்களுக்கு இழைக்கும் துரோகமாகும். இது மிகவும் எளிமையான உண்மை என்று கவாஸ்கர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கவாஸ்கரின் இந்தக் கருத்துக்குக் கராச்சியில் பிறந்த முன்னாள் வீரர் அசீம் ரபீக் சமூக வலைதளம் வாயிலாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கவாஸ்கரின் இந்தப் பேச்சு மிகவும் மோசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய கருத்துகள் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன? அவர் எத்தனை ரன்கள் குவித்தவர் என்பது எனக்கு முக்கியமல்ல, இது அருவருக்கத்தக்க ஒரு அறிக்கை. “பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளில் வர்ணனை செய்வதை கவாஸ்கர் புறக்கணித்துள்ளாரா? நிச்சயமாக இல்லை!” என்று அவர் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறுகையில், “பாகிஸ்தான் வீரர்களை ஏலம் எடுக்கக் கூடாது என்பது பற்றி நிர்வாகத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை. ஆதில் ரஷீத் கிடைக்காத பட்சத்தில், திறமையான சுழற்பந்து வீச்சாளர் என்ற அடிப்படையிலேயே அப்றார் அகமது தேர்வு செய்யப்பட்டார்” என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்திய உரிமையாளர்களைக் கொண்ட வெளிநாட்டு லீக் அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்வது, தற்போது மீண்டும் ஒரு பெரிய விவாதமாக உருவெடுத்துள்ளது.