திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த வேலுவின் மகள் அஸ்வதி (வயது 23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் (25) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு தியாஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது அஸ்வதி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், கடந்த 22-ந்தேதி திவாகர் தனது மனைவியிடம் “கர்ப்பத்தை கலைத்து விடு” என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அஸ்வதி தாயார் விமலா வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று பகலில் அஸ்வதி திவாகர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, கர்ப்பம் குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் “உடல் நலம் சரியில்லை, சிறிது நேரம் ஓய்வெடுக்கிறேன்” என கூறி அறைக்குள் சென்ற அஸ்வதி நீண்ட நேரம் வெளியே வராததால் குடும்பத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவர் தூக்கிட்டு உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப் பதிவு செய்து திவாகரை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
