தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 26, 2025) காலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 28-ஆம் தேதி காலை தீவிரப் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் 28-ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திரக் கடலோரப் பகுதியான மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரை வீசக்கூடும்.

இதன் காரணமாகத் தமிழகத்தில் நாளை (27-10-2025) சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் யாரும் இன்று முதல் (அக்டோபர் 26) கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.