மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரம் கராடி பகுதியில், இந்திய விமானப்படை (IAF) அதிகாரி என பொய்யாக நடித்து, சமூக ஊடகங்களில் தன்னை புகழ்வதோடு, பெண்களை ஈர்க்க முயன்ற ஹோட்டல் பணியாளர் கௌரவ்குமார் தினேஷ்குமார் (வயது 27) என்பவரை இந்திய ராணுவத்தின் தெற்குப் பிரிவு உளவுத்துறையும், புனே நகர காவல்துறையும் இணைந்து கைது செய்துள்ளனர். இவர், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவரும், புனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தவரும் ஆவார். இவர் விமானப்படை யூனிபார்மில் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அதாவது, பெண்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த மோசடியை செய்துள்ளார் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்கெனவே 2022-ஆம் ஆண்டு, தில்லி விமானப்படை முகாமில் இவர் போலி விமானப்படை காலணிகளை தவறாக அணிந்து நடந்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த இவர், புனேவில் குடியேறி, லோகேகான் பகுதியில் உள்ள டெய்லரிடம் இருந்து இரண்டு விமானப்படை யூனிஃபார்மை வாங்கி, தன்னை அதிகாரியாக சித்தரித்து வந்தார். மேலும், கடந்த ஒரு மாதத்திற்கு முன், இவர் அந்த யூனிஃபார்மை எரித்ததாகவும் கூறப்படுகிறது.
அவரது வீட்டில் இருந்து IAF பதக்கங்கள் (இந்து, ஆங்கில மொழியில்), “Proud Air Force Wife” எனக் குறிப்பிடப்பட்ட பதக்கம், விமானப்படை ஜாக்கெட்டுகள், டி-ஷர்ட்கள், ராணுவ தொப்பி மற்றும் காலணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரது மீது பாரதிய நயா சனிதா (BNS) சட்டத்தின் 168வது பிரிவின் கீழ், சட்டவிரோதமாக ராணுவ உடைகள் அணிந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இவர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் தன்னை அதிகாரியாக சித்தரித்தார், யாரையெல்லாம் ஏமாற்றினார் என்பதைப் பற்றிய முழுமையான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
