இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திரம் ஜெமிமா ரோட்ரிக்ஸ், இந்த முறை பேட்டிங்கால் அல்ல, பாடல் திறமையால் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளார். டிசம்பர் 3-ஆம் தேதி மும்பையின் வில்லிங்டன் கத்தோலிக்க ஜிம்கானாவில் நடந்த நிகழ்வில், எட் ஷீரனின் பிரபல பாடல் ‘Perfect’–ஐ அவர் பாடிய காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
சாண்டாக்ரூஸ் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அந்த ஜிம்கானாவில் படமாக்கப்பட்ட இந்த வீடியோ, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. துடிப்பான ஆளுமையும், மைதானத்தில் வலது கை பேட்டிங் திறமையும் கொண்ட ஜெமிமா, பாடல்களிலும் சிறந்து விளங்குபவர். ஹாய் அப்னா தில் தோ ஆவாரா, ஜப் கோய் பாத், க்யா ஹுவா தேரா வாடா உள்ளிட்ட பல பாடல்களை இன்ஸ்டாகிராமில் முன்பும் அவர் பாடி பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜெமிமாவிற்கு, வில்லிங்டன் கத்தோலிக்க ஜிம்கானா நிர்வாகம் கௌரவ வாழ்நாள் உறுப்பினர் பதவியை வழங்கி கௌரவித்தது. குறிப்பாக, கடந்த 2024 அக்டோபரில், தந்தையின் மதச் சர்ச்சையைத் தொடர்ந்து கார் ஜிம்கானா ரோட்ரிக்ஸின் கௌரவ உறுப்பினர் பதவியை ரத்து செய்தது. அவரது தந்தை இவான் ரோட்ரிக்ஸ், ஜிம்கானா வளாகத்தை அனுமதி இல்லாமல் மதக் கூட்டங்களுக்கு பயன்படுத்தியதாக பல புகார்கள் எழுந்தன. அக்டோபர் 20 அன்று நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தீவிரமாக பேசப்பட்டதைத் தொடர்ந்து, அந்த உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது.
மேலும் இந்நிலையில், வில்லிங்டன் ஜிம்கானா வழங்கிய இந்த புதிய கௌரவம், ஜெமிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
