ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்த ஜோத்ஸ்நரனி நாயக் (65) மீது, அவரது மகனே தீவிரமாக தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜோத்ஸ்நரனியின் மகன் டேபாசிஷ் நாயக் (45) மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்ததாக தகவல். இதனால், தாயிடம் அவ்வப்போது பணம் கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில், தனது சேமிப்பு தொகையில் இருந்தபடி மகனுக்கு சில சமயம் பணம் வழங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் மது வாங்க பணம் கேட்ட டேபாசிஷுக்கு, ஜோத்ஸ்நரனி “என்னிடம் பணம் இல்லை” என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேபாசிஷ் தாயின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஒரே கணத்தில் தீ மிதந்து எரிந்த ஜோத்ஸ்நரனி, வலியால் அலறி உதவி கோர, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சையில் உள்ளதாக தகவல்.

தாக்குதல் நடத்திய டேபாசிஷ் சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடிய நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த கொடூரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.