உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் (WCL) தொடரின் இரண்டாவது சீசன் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.

யுவராஜ் சிங், ஏபிடி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், பிரட் லீ, ஷாஹித் அப்ரிடி, இயன் மோர்கன் உள்ளிட்ட முன்னாள் சூப்பர் ஸ்டார் வீரர்களின் பங்கேற்பால் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே அதிக ஆவல் உருவாகியுள்ளது.

தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் முடிவடைந்த நிலையில், அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறியுள்ளன. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெளியேறிய நிலையில், முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன.

ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் விளையாட இந்திய வீரர்கள் ஏற்கனவே லீக் சுற்றுப்போட்டியில் பங்கேற்க மறுத்தனர். அந்த போட்டி இதன் காரணமாகவே ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்த சூழலில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அரையிறுதி போட்டியை முன்னிட்டு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. இந்த போட்டிக்கான தலைமை ஸ்பான்சராக இருந்த இந்திய நிறுவனமான EaseMyTrip, போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்தப் பற்றி நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான நிஷாந்த் பிட்டி X தளத்தில் கூறியிருப்பதாவது: “பயங்கரவாதத்துடன் உறவு வைத்திருக்கும் ஒரு நாட்டுடனான போட்டியை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். கிரிக்கெட் மட்டும் அல்ல, நாடு முக்கியம். WCL-ல் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியுடன் EaseMyTrip எவ்வித தொடர்பும் இனி இருக்காது. ஜெய்ஹிந்த்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், Easemytrip ஸ்பான்சரிலிருந்து விலகியிருப்பதால், இந்திய வீரர்களும் இந்த அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பார்களா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பதான் உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கெதிராக விளையாட மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், அரையிறுதி நடைபெறும் வாய்ப்பு குறைந்து வருகின்றது. இந்திய ரசிகர்கள் நாடு முக்கியம் என ஒருமனதாகத் தெரிவிக்கின்றனர். WCL தொடரின் நிர்வாகம் இந்த சூழ்நிலைக்கு எப்படி பதிலளிக்கிறது என்பதே தற்போது ரசிகர்களிடையே கவனிக்கப்படும் கேள்வியாக உள்ளது.