உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் (WCL) தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்த அரைஇறுதிப் போட்டியில், இந்தியா திடீரென விலகியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தானுடன் மோதும் போட்டியில் இருந்து ஓய்வெடுத்தது, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட முடிவாகவே கூறப்படுகிறது. ஏனெனில் லீக் போட்டியிலேயே பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட மறுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த முடிவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி அரைஇறுதியில் “வாக் ஓவர்” மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இது பாகிஸ்தான் தரப்பில் மகிழ்ச்சி ஏற்படுத்தினாலும், இந்தியாவின் திட்டவட்டமான நடவடிக்கை அவர்களை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட பயங்கரவாதிகள் மேற்கொண்ட பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர், இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையை ஒட்டி, பல்வேறு மக்களும் பாகிஸ்தானை சர்வதேச போட்டிகளில் புறக்கணிக்க வேண்டும் என  கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்தியா ‘நாடு முதலில்’ என்ற கொள்கையை பின்பற்றி பாகிஸ்தானுடன் விளையாடுவதை மறுத்துள்ளது. இந்திய அணியின் இந்த முடிவால், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனாக விளங்கிய ஷாஹித் அப்ரிடி ஆவலாக காத்திருந்த நிலையில் எதிர்பாராத பின்னடைவை சந்தித்தார்.

சமீபத்தில் அவர் கூறிய ஒரு வீடியோ மிகவும் வைரலாக பரவியது. அதில், “என்ன முகத்துல இந்தியா விளையாடப் போறதுன்னு தெரியலை.. ஆனா நம்ம கூடதான் விளையாட வேண்டி வரும்” என்று கூறியிருந்தார். இந்திய அணி உண்மையில் விலகும் என அவருக்கு நம்பிக்கை இல்லையெனினும், இந்தியா தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டை கடைபிடித்து போட்டியில் இருந்து விலகியது.

மேலும், இந்தியா அரைஇறுதி போட்டியில் இருந்து விலகிய பிறகு, ஷாஹித் அப்ரிடி ஒரு கட்டிடத்தின் பால்கனியில் நின்று, இந்திய அணி ஸ்டேடியத்தைவிட்டு வெளியேறுவதை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ எப்போது எடுத்தது என்பது தெரியவில்லை, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது பொருத்தமாக அமைந்துள்ளது.

இதே நேரத்தில், இந்தியா பாகிஸ்தான் அணிகளை ஒரே குழுவில் வைத்து நடத்தப்பட உள்ள ஆசிய கோப்பை போட்டியில், இந்தியா பாகிஸ்தானை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறது. இந்த போட்டி செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் உலக லெஜண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானை புறக்கணித்துள்ள இந்த திடமான முடிவு, சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றிருக்கிறது.