2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை தொடர்பாக, ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை டி-20 வடிவில் நடைபெறவுள்ள இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன.

இதேநேரம்,இன்று  வெளியான ஒரு செய்தியில், இந்திய அணி 2025 ஆசியக் கோப்பையில் பங்கேற்காது என கூறப்பட்டது. இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது பிசிசிஐ தரப்பில் வரும் விளக்கத்தில், “இந்திய அணி பங்கேற்பு குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இது இன்னும் பரிசீலனையில் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

அதாவது, இந்திய அணி ஆசியக் கோப்பையில் பங்கேற்குமா இல்லையா என்பது குறித்து தற்போது எதுவும் உறுதியாக கூற முடியாத நிலைமை உருவாகியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நெருக்கடிகள் காரணமாக, இந்த போட்டியில் இரு அணிகளும் ஒன்றுக்கு எதிராக விளையாடுவது பற்றி சந்தேகங்கள் நிலவுகின்றன.

இதேநேரம், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, சில முன்னாள் இந்திய வீரர்கள், “இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கக் கூடாது” என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனாலேயே, 2025 ஆசியக் கோப்பையைச் சுற்றி அதிர்ச்சியும், எதிர்பார்ப்பும் மிகுந்த நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. சமீப நாட்களில், பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கரவாதச் சம்பவங்களும், இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாட்டும் இந்த முடிவில் முக்கிய பங்காற்றக்கூடியவை என கூறப்படுகிறது.