துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான அண்மைய போட்டியை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் ஐசிசி இடையே கடும் முரண்பாடு ஏற்பட்டது. போட்டி நடுவராக இருந்த ஆண்டி பைக்ராஃப்டை நீக்கக் கோரி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பிடிவாதம் பிடித்தது. இதனால், அவர்கள் போட்டிக்கு சரியான நேரத்தில் வரவில்லை. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க வேண்டியிருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி மைதானத்திற்கு  ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் வந்தார்கள். இதனிடையே, போட்டி நடுவராக பைக்ராஃப்ட் டாஸ் நிகழ்வுக்கு வந்தார். பின்னர் போட்டி இரவு 9 மணிக்கு தொடங்கியது.

இது பற்றி  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வெளியிட்ட அறிக்கையில், “அந்தி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் அணியின் மேலாளர் நவீத் அக்ரம் சீமா மற்றும் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகே பாகிஸ்தான் அணி போட்டியில் பங்கேற்க ஒத்துக்கொண்டது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “போட்டியின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேப்டன்கள் கைகுலுக்குவதை பைக்ராஃப்ட் தடுத்தார். இது மிகுந்த அவமதிப்பாக இருந்தது” என்று பிசிபி தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 14ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த விவகாரம் தொடர்பான ஒரு வீடியோவையும் பிசிபி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், மேலாளர், கேப்டன் ஆகியோர் பைக்ராஃப்டுடன் பேசும் காட்சி காணப்படுகிறது. ஆனால் வீடியோவில் பேசும் சத்தம் கேட்கவில்லை.

மேலும் ஐசிசி தரப்பில், “செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த சம்பவம் ஒரு தவறான புரிதலின் விளைவாகவே ஏற்பட்டது” என்று பைக்ராஃப்ட் விளக்கி, மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, போட்டி நடுவராக இருந்த பைக்ராஃப்டின் நடத்தை விதிமீறலா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஐசிசி விசாரணை நடத்தும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து ஒரு நம்பகமான வட்டாரம் கூறுகையில், “தவறே செய்யாத ஒருவரிடமிருந்து மன்னிப்பு கேட்பது தேவைப்படுமா என்ற கேள்வியே எழுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.