சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்திலிருந்து 6-வது இடத்திற்குப் பின்தங்கியுள்ளது. இந்தியாவின் இந்தத் தரவரிசைச் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததுதான்.

மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்தபோது, பிரிட்டனின் பவுண்ட் மதிப்பு டாலருக்கு எதிராக வலுவடைந்தது. இதனால் டாலர் மதிப்பிலான கணக்கீட்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  பிரிட்டனை விடக் குறைவாகக் காட்டப்பட்டு, பிரிட்டன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதனால் மற்றொரு முக்கியக் காரணம், இந்தியாவின் ஜிடிபி கணக்கீட்டு முறையில் கொண்டுவரப்பட்ட புள்ளிவிவர மாற்றங்கள் ஆகும். ஜிடிபி மதிப்பீட்டிற்கான அடிப்படை ஆண்டை மாற்றியமைத்தபோது, இந்தியாவின் முந்தைய ஜிடிபி மதிப்பீடுகள் சற்று அதிகமாக இருந்ததாகக் கண்டறியப்பட்டு அவை திருத்தப்பட்டன. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார மதிப்பு டாலர் கணக்கில் சுமார் 3.92 டிரில்லியன் டாலராகக் குறைந்தது அதே நேரத்தில் பிரிட்டனின் பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலரை எட்டியது.

இருப்பினும், இந்தியா இன்னும் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாகவே நீடிக்கிறது. வரும் 2027-ஆம் ஆண்டில் இந்தியா மீண்டும் 4-வது இடத்தைப் பிடிக்கும் என்றும், 2031-க்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.