சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படும் சில ‘டிரெண்ட்கள்’ நிஜ வாழ்க்கையில் எத்தனைப் பெரிய வன்முறையைத் தூண்டும் என்பதற்குப் பிரேசில் நாட்டில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு ரத்த சாட்சியாக மாறியுள்ளது.
20 வயதே ஆன ஹெலினா அனிசியோ ரோசாக் என்ற இளம்பெண், தன்னை ஒருதலைப்பட்சமாகக் காதலித்த இளைஞரை மறுத்ததற்காக, அந்த நபரால் 50 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார். ஹெலினாவின் தாய் தடுத்ததால் மட்டுமே அவர் உயிர் தப்பியுள்ளார். பல அறுவை சிகிச்சைகள் மற்றும் கோமா நிலைக்குப் பிறகு ஹெலினா தற்போது மெல்ல மீண்டு வருகிறார்.
ஆனால், இந்தத் தாக்குதலுக்கு அந்த இளைஞன் பார்த்த சமூக வலைதள வீடியோக்களே காரணம் என்பது தான் இப்போது உலகையே அதிரவைத்துள்ளது. சமீபகாலமாக இணையத்தில் “பெண்கள் ‘இல்லை’ என்று சொன்னால் என்ன செய்வது?” என்ற தலைப்பில் பல ஆண்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதில் பொம்மைகளை கத்தியால் குத்துவது போலவும், துப்பாக்கியால் சுடுவது போலவும் ‘பிராக்டிஸ்’ செய்வதாகப் பதிவிட்டுள்ளனர். ஹெலினாவைத் தாக்கிய நபரும் இத்தகைய வன்முறை வீடியோக்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கண்டனத்தைப் பெற்றுள்ள நிலையில், பிரேசில் காவல்துறை இது குறித்துத் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
குறிப்பாக டிக்டாக் போன்ற தளங்களில் இத்தகைய வன்முறைப் பதிவுகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இணையத்தில் பரவும் ‘நகைச்சுவை’ என்ற போர்வையிலான வன்முறை, ஒரு பெண்ணின் வாழ்வையே சிதைத்துள்ள இந்தச் சம்பவம் இணையவாசிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
