ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் விடுத்த அமைதி அழைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். “இது நிஜ உலகம் என்பதை போப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், ஈரான் போன்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பது ஒட்டுமொத்த உலகிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலில் அமைதி நிலவ வேண்டும் என்ற போப் ஆண்டவரின் நிலைப்பாட்டை டிரம்ப் நிராகரிப்பதோடு, அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளில் அவர் தலையிடக்கூடாது என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போப் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்றாலும், எதார்த்த நிலையை அவர் உணர வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, ஈரான் தனது யுரேனிய இருப்பை ஒப்படைக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும், ஈரானின் அணு ஆயுத பலம் உலக அமைதிக்கு உகந்தது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் முன்னதாக, தன்னை இயேசுவாகச் சித்தரிக்கும் ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய டிரம்ப், தற்போது போப் ஆண்டவருக்கு எதிராகத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.