துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கேரளா, கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “சுதர்சன் ரெட்டி நக்சல் பயங்கரவாதத்திற்கு உதவியவர். 2011-ல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த அவர், சல்வா ஜுடும் அமைப்பை சட்டவிரோதமானது என அறிவித்தார். இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றால், நக்சல் பயங்கரவாதம் 2020-க்குள் முடிவுக்கு வந்திருக்கும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “மாவோயிஸ்ட்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய பழங்குடியின இளைஞர்கள் சல்வா ஜுடும் என்ற பெயரில் செயல்பட்டனர். ஆனால் சுதர்சன் ரெட்டி, இடதுசாரி சிந்தனையால் உந்தப்பட்டு, அவர்களை ஆயுதங்களை ஒப்படைக்கச் செய்தார். இன்று அதே நபரை காங்கிரஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது, இது இடதுசாரிகளின் அழுத்தத்தின் விளைவு” என அமித்ஷா சாடியுள்ளார்.
