இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 2025-ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் கவுன்சிலிங்கில் பங்கேற்க பீகார் மாநிலத்தை சேர்ந்த அங்கிதா பாரதி என்ற மாணவி வந்தார்.
ஆனால், அவரது பெயர் தேர்வான மாணவர் பட்டியலில் இல்லாததால், அதிகாரிகள் சான்றிதழ்களைச் சரிபார்த்தபோது அவை போலியானவை என தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த நிர்வாகம் உடனடியாக போலீசில் புகார் செய்தது. போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, அங்கிதா பாரதியை கைது செய்தனர்.
விசாரணையில், அங்கிதா பாரதி உண்மையில் நீட் தேர்வில் வெறும் 30 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், அவர் 590 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டும் போலி மதிப்பெண் அட்டையும், தரவரிசை அட்டையும், ஒதுக்கீடு கடிதத்தையும் தயாரித்து சமர்ப்பித்திருந்தார்.
கவுன்சிலிங்கின் போது உள்நுழைவு ஐடி, கடவுச்சொல் கேட்டபோது, மறந்துவிட்டதாகக் கூறிய அவர், பின்னர் மங்கலான ஆவணங்களையும், மொபைல் ஸ்கிரீன்ஷாட் மூலமும் போலியான மதிப்பெண்களை காட்ட முயன்றதாக தெரியவந்துள்ளது.
இந்த மோசடி சம்பவம் உறுதி செய்யப்பட்டதால், அங்கிதா பாரதியின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 318(4)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு டாண்டா மருத்துவக் கல்லூரியிலும், போலி ஆவணங்கள் மூலம் சேர முயன்றதாக இவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது பிலாஸ்பூர் டிஎஸ்பி மதன் திமான் தலைமையில் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.
