தமிழகத்தில் குடும்ப அட்டைகளை வைத்திருந்து, நீண்ட நாட்களாக நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருக்கும் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, தொடர்ந்து ரேஷன் பொருட்களை வாங்காத குடும்ப அட்டைகள் தற்காலிகமாக முடக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதற்குப் பிறகும் வாங்கத் தவறினால் கார்டில் இருந்து பெயர் நீக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு தற்போதும் செயல்பாட்டில் தான் உள்ளதா என்பதை அறிய, உடனடியாக அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்றோ அல்லது தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ‘TNPDS’ போர்ட்டலைப் பயன்படுத்தியோ உடனடியாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் மாஸ் திட்டமான ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.
கார்டு முடக்கப்படும் என்ற அச்சத்தில் இருக்கும் நலிவடைந்த மக்களுக்கு இந்த ‘தாயுமானவர் திட்டம்’ பெரும் பக்கபலமாக அமைந்துள்ள நிலையில், தகுதியுள்ள பயனாளிகள் இந்தச் சேவையைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
