இந்தியா கூட்டணியை வழிநடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் மிகவும் பொருத்தமான தலைவர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். அன்று காமராஜர் பிரதமராகும் வாய்ப்பு இருந்தும் அதை மறுத்து மற்றவர்களை உருவாக்கியது போல, இன்று ஸ்டாலினும் ராகுல் காந்தியை பிரதமராக்கத் துணை நிற்கும் நிலையில் இருப்பதாக அவர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

ஸ்டாலின் வெற்று முழக்கங்களை மட்டும் பேசுபவர் அல்ல என்றும், கூட்டாட்சி தத்துவத்திற்காக அவர் முன்னெடுக்கும் கருத்துக்கள் ராகுல் காந்திக்கு பெரும் பக்கபலமாக இருக்கும் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது, இந்தியா கூட்டணியில் தற்போது திமுகதான் மிக வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

40 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு பலமான சக்தியாக மு.க.ஸ்டாலின் விளங்குவதாகவும், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் ஏற்கனவே விலகிவிட்ட நிலையில், ஸ்டாலின் ஒருவேளை வெளியேறினால் இந்தியா கூட்டணி என்பது பெயரளவில்கூட இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தில் உள்ள பலம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பதால், கூட்டணியைத் தாங்கிப் பிடிக்கும் தூணாக ஸ்டாலின் இருக்கிறார் என்பது சீமானின் கருத்தாக உள்ளது.