தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இதற்குப் பிரதமர் மோடி சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’-இல் நன்றி தெரிவித்து, இரு பெரும் ஜனநாயக நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்கா உலகிற்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து திகழ வேண்டும் என்றும், அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக, அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருக்கமாகும் சூழ்நிலையில், பயங்கரவாதத்தை எதிர்த்து பிரதமர் மோடி எடுத்துரைத்த நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றதாகக் கூறப்படுகிறது. வர்த்தக வரிகள் உள்ளிட்ட பிரச்சினைகளால் இரு நாடுகளுக்குமிடையில் பதற்றம் நிலவும் வேளையில் இந்த பேச்சு நடைபெற்றது.

டிரம்ப், மோடியை “சிறந்த தலைவர் மற்றும் நம்பகமான நண்பர்” எனப் புகழ்ந்ததுடன், இந்தியா–பாகிஸ்தான் பதற்றத்தை குறைப்பதற்கான அவரது முயற்சிகளை பாராட்டினார். இதேவேளை, சமீபத்தில் மோடி, “அமைதியான இந்தியாவின் யுகம் முடிந்தது, இந்தியா இனி மௌனமாக இருக்காது; சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், வான்வழி தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தகுந்த பதிலடி அளிக்கும்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது