இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்வைத்துள்ள கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. மத்திய பாஜக அரசு உலக ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராகத் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கத் தவறிவிட்டதாகவும், குறிப்பாக அமெரிக்காவின் கொள்கைகளைச் சார்ந்து ஒரு ‘அடிமை நாடு’ போலவே இந்தியா செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே வெளியுறவுக் கொள்கையில் ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்திருக்கும் அணுகுமுறையையே பின்பற்றுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியா தனது பாரம்பரியமான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்வது கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
இது குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுமதி அளிப்பதும், அதை மோடி அரசு ஒரு சலுகையாக ஏற்றுக்கொள்வதும் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்று பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் உடனான இந்தியாவின் நெருக்கம் தற்போதைய ஆட்சியில் உச்சம் தொட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியா தனது சுயசார்புத் தன்மையையும், வெளியுறவுக் கொள்கையில் தன்னிச்சையான முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் தனித்துவமான அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியம் என்பதே அவரது கருத்தின் மையப்பொருளாக உள்ளது.
