குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மருத்துவ உலகையே உலுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர், சக பெண் மருத்துவருக்குத் தெரியாமலேயே அவரது அந்தரங்கத் தருணங்களை ரகசியமாகப் படம்பிடித்து, அதனை வைத்து மிரட்டி ரூ. 25 லட்சம் கேட்டுப் பணம் பறிக்க முயன்றுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த மருத்துவரை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அந்த நபரிடம் இருந்து 3,000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட மருத்துவர், கடந்த பல மாதங்களாக மருத்துவமனை வளாகத்திலும் மற்ற இடங்களிலும் பல பெண்களை ரகசியமாகப் படம்பிடித்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட வீடியோக்களில் பல பெண்களின் அந்தரங்கக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இது ஒரு திட்டமிட்ட தொடர் குற்றமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் சக ஊழியர்களிடையே நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த மருத்துவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் ராஜ்கோட் பகுதியில் பெண்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்புக் குறித்த பெரும் அச்சத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.