கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவனூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனுப்பிரியா, கடந்த 19-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றவர் மர்மமான முறையில் காணாமல் போனார். லாலூரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிஏ படித்து வந்த இவர், மாலை நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே, அனுப்பிரியா வைத்திருந்த கடிதம் ஒன்றைப் போலீசார் கைப்பற்றினர். அதில், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் தனது காதலன் நீலஜ் மற்றும் அவரது குடும்பத்தினரே பொறுப்பு என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது, இந்த வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தீவிரமாகத் தேடப்பட்டு வந்த அனுப்பிரியா, மணித்தரா பகுதியில் உள்ள அணை கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அவரது உடல் கைப்பற்றப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் அவர் கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துத் திருச்சூர் மாநகரப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
