டெல்லி விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் விமானப் பயணிகள் இறங்கும் இடத்திற்கு அருகிலேயே கடைகள் மற்றும் நாணய மாற்றகங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி பல்வேறு எதிர்வினைகளை ஈர்த்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய கட்டிடக் கலைஞர் மற்றும் மனிதநேய ஆர்வலரான டேமன் ஜும்ப்ரோகெல் , டெல்லி விமான நிலையத்தின் குடியேற்றப் பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள சில்லறை வர்த்தகக் கவுண்டர்களைக் காட்டும் காணொளியை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். அதில், குடியேற்றப் பகுதிக்கு அருகிலேயே வர்த்தகக் கடைகள் இருப்பது குறித்து அவர் தனது அதிருப்தியைப் பதிவிட்டிருந்தார்.

இந்தக் காணொளிக்கு நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சில வெளிநாட்டு விமான நிலையங்களிலும் இதே போன்ற சூழ்நிலைதான் உள்ளது என்றும், இது இந்தியாவை மட்டும் குறிவைத்து விமர்சிப்பதாக உள்ளதாகவும் பயனர்கள் சிலர் வாதிட்டனர். மேலும், ஆசிய நாடுகளின் விமான நிலைய சேவைகள் மற்ற இடங்களைவிடச் சிறந்தவை என்றும், வெளிநாட்டு விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்களின் சேவைகளுக்குப் பலரும் நன்றியுணர்வு தெரிவித்துள்ளனர்.

“>

 

இதற்கிடையே, ஆர்.பி.ஜி குழுமத்தின் தலைவரான ஹர்ஷ் கோயங்கா, நமது பெரும்பாலான விமான நிலையங்களில் பயணிகள் குடியேற்றப் பகுதி வழியாக வெளியே வரும்போது விற்பனையாளர்கள் சூழ்ந்துகொள்வதைத் தவிர்க்கலாம் என்றும், பயணிகளுக்கு மிகவும் கண்ணியமான மற்றும் தொந்தரவற்ற வரவேற்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.