அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே, ஜூன் 6-ஆம் தேதி டெல்லி திரும்புவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள அவர், மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் இந்தத் தர்மப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜூன் 6-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் தான் டெல்லி விமான நிலையம் வந்திறங்கும்போது, தன்னுடன் இணையுமாறு தனது ஆதரவாளர்களை அபிஜித் தீப்கே கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் குரல் எழுப்பினால், மத்திய அரசு நிச்சயமாகச் செவிசாய்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் இருந்து அனைவரும் ஒன்றாகப் புறப்பட்டு, ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதி கோரி நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் இவருக்குப் பெரும் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது.
