நேபாளப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, பாலேந்திர ஷா முதல்முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, நீண்டகாலமாக நீடித்து வரும் இரு நாட்டு எல்லைப் பிரச்சினை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், இந்தியப் பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்துள்ளதாகக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லிபுலேக் உள்ளிட்ட நேபாளப் பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்துள்ளது குறித்து நேபாள அரசு ஏற்கனவே இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு இந்தியத் தரப்பிலிருந்து பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், நேபாள நிலத்தை இந்தியா மட்டும் ஆக்கிரமிக்கவில்லை, நேபாளமும் இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது என்று அவர் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பேசிய பிரதமர் பாலேந்திர ஷா, இந்தியாவுடன் எப்போதும் ஒரு சுமுகமான மற்றும் இணக்கமான உறவைப் பேணவே தனது அரசு விரும்புவதாகவும், பரஸ்பர மரியாதை மற்றும் அமைதி வழியிலேயே பிராந்திய எல்லைச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த எல்லைப் பிரச்சினையின் வேர்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் காலத்தைச் சேர்ந்தவை என்பதால், இந்த விவகாரத்தை பிரிட்டன் அரசிடமும் தனது அரசு கொண்டு செல்லும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவும் நேபாளமும் சுமார் 1,751 கிலோமீட்டர் நீளமுள்ள திறந்த எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நிலையில், காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியதுரா ஆகிய எல்லைப் பகுதிகள் தங்களது உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதி என்பதில் இந்தியத் தரப்பு உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.