உக்ரைன், ரஷ்யா இடையேயான போரின் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மீது அமெரிக்கா ஏற்கனவே கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விவசாய உற்பத்திப் பொருட்கள் அமெரிக்கச் சந்தையில் குறைவான விலையில் கிடைப்பதால், அமெரிக்காவின் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டிருந்த நிலையில், விவசாய விளைபொருட்களுக்கான புதிய வரிவிதிப்பு இந்தியாவின் வர்த்தகத் துறைக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் என அஞ்சப்படுகிறது.
