செல்ஃபி எடுக்கும் போதே கவனச்சிதறல் காரணமாக மலையிலிருந்து தவறி விழுந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அதிசயமாக உயிர்பிழைத்த சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.  சீனாவின் குவாங்கானில் உள்ள ஹுவாயிங் மலையில் நடந்த இந்த சம்பவத்தில், மலையேற்றப் பயணத்தில் இருந்த ஒருவர், மலையின் ஆபத்தான விளிம்பில் நின்றபடி கைபேசியில் செல்ஃபி எடுக்க முயன்றார். காணொளியில், அவர் பாறையின் நுனியில் சமநிலைப்படுத்திக் கொண்டபடி கீழே நோக்கி பார்க்கும் தருணம் பதிவாகியிருக்கிறது.

 

அப்போது திடீரென அவர் சமநிலை தவறி 130 அடி (சுமார் 40 மீட்டர்) உயரமுள்ள பாறையிலிருந்து கீழே விழுந்துவிடுகிறார். அவர் கீழே உள்ள மரங்களும் பாறைகளும் நிறைந்த பகுதிக்குள் புரண்டவாறு மறைந்து காண்பதைக் காட்சி காட்டுகிறது. அந்த நபர் விழுந்ததை பார்த்த மற்ற சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்து அவரைத் தேடுவதற்காக பாறையின் விளிம்பிற்கு விரைந்து சென்றனர். ஆரம்பத்தில் அவர் எங்கும் காணப்படாததால் அச்சம் ஏற்பட்டது.

ஆனால் பின்னர் வந்த தகவல்கள், அந்த நபர் சுமார் 50 அடி உயரத்திலிருந்து விழுந்தும் அதிசயமாக உயிர் பிழைத்ததை உறுதிப்படுத்தின. அவர் பெற்ற காயங்கள் சிகிச்சைக்குப் பின் ஆபத்தற்றதாக உள்ளதாக கூறப்பட்டது. உயிர் தப்பிய அந்த நபர் சமூக ஊடகங்களில் பதிவிட்ட செய்தியில்,
“மலைக்கடவுள்கள் என்னை காத்தார்கள். நான் 40 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து, சுமார் 15 மீட்டர் சரிவில் உருண்டு சென்றேன். பாறைகள் சரிந்தபோது இறந்து விடுவேன் என நினைத்தேன். உயிருடன் இருப்பது மிகப் பெரிய அதிசயம். இனி வாழ்க்கையை மதித்து நன்றாக வாழ்வேன்” என எழுதியுள்ளார்.

மேலும் செல்ஃபி எடுப்பதற்காக ஆபத்தான நிலைகளைத் தேர்வு செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த சம்பவம் ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.