தற்போது அமலில் உள்ள வருமானவரி சட்டம் கடந்த 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப இந்தச் சட்டத்தை திருத்தவும், சிக்கலான சட்டப்பிரிவுகள் மற்றும் சொற்றொடர்களை எளிமைப்படுத்தவும், மத்திய அரசு புதிய வருமானவரி மசோதா – 2025-ஐ இந்த ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த மசோதா மக்களவையும், மாநிலங்களவையும் கடந்து நிறைவேற்றப்பட்டதுடன், ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இதையடுத்து, புதிய வருமானவரி சட்டம் – 2025, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. 64 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக இந்த புதிய சட்டம் அமல்படுத்தப்படுகிறது.
புதிய சட்டத்தின் முக்கிய அம்சமாக, வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமானவரி விதிக்கப்படாது. இதன் மூலம், வருமானம் ஈட்டும் தனிநபர்களின் கைகளில் கூடுதல் பணம் புழங்கும் என்றும், அவர்கள் அதிக அளவில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உயரும் என்றும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
இதற்கிடையே, புதிய வருமானவரி சட்டத்தின் ஒரு பகுதியாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமைப்பிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. வரி அடுக்குகள் 4-க்கு பதிலாக 2 ஆக குறைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 22-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், 375 பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சிகரெட் மீது ஜி.எஸ்.டி.யுடன் கூடுதல் கலால் வரி விதிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல், பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி.யுடன் கூடுதல் வரி விதிக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள், மத்திய அரசு அறிவிக்கும் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த கட்டமாக சுங்க வரிகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
