இந்திய கிரிக்கெட் உலகின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது அபாரமான திறமைக்காக இந்திய அரசின் உயரிய விருதான ‘பிரதமர் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ விருதைப் பெற்றுள்ளார். புது டில்லியில் நடைபெற்ற விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களிடமிருந்து இந்த விருதினை அவர் நேரடியாகப் பெற்றார்.
மேலும் மிகச்சிறிய வயதிலேயே கிரிக்கெட் மைதானத்தில் அவர் படைத்த சாதனைகளையும், விளையாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக இந்த கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, மிக இளம் வயதிலேயே முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திலும் ஒரு இளம் வீரராக பெரும் தொகையோடு ஒப்பந்தமாகி வரலாற்று சாதனை படைத்தார். விளையாட்டுத் துறையில் அவர் காட்டி வரும் அசாத்திய வேகம் மற்றும் நுணுக்கங்கள், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக அவரை மாற்றியுள்ளது. குடியரசுத் தலைவரிடம் பெற்ற இந்த விருது, நாட்டின் லட்சக்கணக்கான இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
