வெனிசுலா அதிபர் கடத்தப்பட்டதைப் போல இந்தியப் பிரதமரையும் ட்ரம்ப் கடத்திச் செல்வாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவாண் பேசியிருப்பது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிருத்விராஜ் சவாண், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இந்திய – அமெரிக்க உறவு மற்றும் வெனிசுலா அரசியல் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “வெனிசுலாவில் நடைபெற்றதைப் போன்ற ஒரு சம்பவம் இந்தியாவிலும் நடக்குமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நமது பிரதமரைக் கடத்திச் செல்வாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் பிடித்துச் சென்ற விவகாரத்தை மையமாக வைத்து அவர் எழுப்பிய இந்தக் கேள்வி, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுத வல்லமை கொண்ட இந்தியாவை வெனிசுலா போன்ற ஒரு நாட்டுடன் ஒப்பிடுவதா என்றும், இந்தியப் பிரதமரை மதுரோவுடன் ஒப்பிட்டுப் பேசுவதா என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர். சவாணின் இந்தக் கருத்து முதிர்ச்சியற்றது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவாண், இந்தியாவின் நிலையை வெட்கமின்றி வெனிசுலாவுடன் ஒப்பிடுகிறார். வெனிசுலாவில் நடந்தது இந்தியாவிலும் நடக்குமா என்று கேட்டதன் மூலம், காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருப்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்து செல்வதையே இது காட்டுகிறது.”
இவ்வாறு அவர் சாடியுள்ளார். நாட்டின் பிரதமரை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் தலைவர் ஒருவரே இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
