‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற ராணுவ மட்டத்திலான சந்திப்பின்போது, இந்திய ராணுவ அதிகாரிகள் ஆங்கிலத்தில் உரையாடியது குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் அதிருப்தி தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்த உயரதிகாரிகள் கூட்டத்தில், இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநர் (DGMO), விமானப்படை நடவடிக்கைகள் தலைமை இயக்குநர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இந்திய அதிகாரிகள் ஆங்கிலத்தில் கருத்துகளைப் பரிமாறியுள்ளனர்.

இதைக் குறிப்பிட்டுப் பேசிய அந்தப் பாகிஸ்தான் அதிகாரி, “சற்று நேரத்திற்கு முன்பு இந்திய ராணுவத்தின் DGMO மற்றும் மூத்த அதிகாரிகள் இங்கு வந்திருந்தனர். முதலாவதாக, உங்களை யார் ஆங்கிலத்தில் பேசச் சொன்னது? உண்மையில் என்ன நடந்தது என்பதை உலகம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நீங்கள் திட்டமிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள்” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

இந்திய அதிகாரிகள் வேண்டுமென்றே ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது, ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை  உருவாக்குவதற்கான முயற்சி என்று அவர் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ கிளிப் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி, பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி இணையவாசிகள் இந்தியாவிற்கு ஆதரவாகப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

இந்தியா ஒரு பன்மொழிக் கொள்கை கொண்ட நாடு. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஒன்றிணையும்போது, ஆங்கிலம் ஒரு பொதுவான இணைப்பு மொழியாகஇயற்கையாகவே பயன்படுத்தப்படுகிறது. ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் ஆங்கிலம் பயன்படுத்துவது சர்வதேச அளவில் ஒரு பொதுவான நடைமுறைதான் எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் அதிகாரியின் இந்த கருத்தை, இரு நாடுகளின் தகவல் தொடர்பு மற்றும் அரசியல் முதிர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஒரு புதிய வார்த்தைப் போராக மாறியுள்ளது.