மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு காதலியின் பிறந்தநாளை ஹோட்டலில் கொண்டாடச் சென்ற கணவனை, அவரது மனைவி கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் மந்தசௌர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதான ஜுல்பிகார் அலி என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது 38 வயது காதலிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இது குறித்து ரகசியத் தகவல் கிடைத்த ஜுல்பிகாரின் மனைவி, இரவு 11 மணியளவில் தனது சகோதரன் மற்றும் குடும்பத்தினருடன் அதிரடியாக ஹோட்டலுக்குள் நுழைந்தார்.

ஹோட்டல் அறை கதவைத் திறந்ததும் தனது கணவன் காதலியுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி, ஆத்திரத்தில் இருவரையும் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். மனைவியின் உறவினர்களும் சேர்ந்து ஜுல்பிகார் மற்றும் அவரது காதலியை ஹோட்டல் அறையிலிருந்து வெளியே இழுத்து வந்தனர். இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியதால் ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காயமடைந்த ஜுல்பிகார் மற்றும் அவரது காதலி மருத்துவப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில், புகார் அளிக்காமலேயே மனைவியின் குடும்பத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தேவையான ஆவணப் பணிகளை முடித்த பின்னர், போலீசார் ஜுல்பிகாரையும் அவரது காதலியையும் விடுவித்தனர். ஹோட்டல் அறையில் நடந்த இந்த  மோதல் காட்சிகள் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.