ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், அதன் பின்னணியில் ஏற்பட்ட போர் பதற்றத்துக்கும் பிறகு, இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டியாக இருந்ததால் உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

128 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் எடுத்துச் சுலபமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் (37 பந்துகளில், 5 பவுண்டரி, 1 சிக்சர்) மற்றும் ஷிவம் துபே 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த வெற்றி மூலம் இந்தியா சூப்பர்-4 சுற்றுக்குள் முன்னேற, பாகிஸ்தான் அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. இந்தியா முழுவதும் ரசிகர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். குறிப்பாக ஜம்மு, பாட்னா, வாரணாசி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் திரண்ட ரசிகர்கள், கேப்டன் சூர்யகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் கூறி, பட்டாசு வெடித்து வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.