இந்தியாவிடம் அடைந்த கிரிக்கெட் தோல்வியால் துவண்டு போயிருந்த பாகிஸ்தான் மக்களுக்கு, விடியற்காலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றொரு பேரடியாக வந்து சேர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்த சோகத்தில் இருந்த அந்நாட்டு மக்கள், திங்கள்கிழமை அதிகாலையில் வெளியான எரிபொருள் விலை உயர்வு அறிவிப்பால் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (Ogra) பரிந்துரைத்ததன்பேரில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது:

பெட்ரோல்லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ. 258.17-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிவேக டீசல் (HSD) விலை லிட்டருக்கு ரூ. 7.32 அதிகரிக்கப்பட்டு, தற்போது ரூ. 275.70-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடுமையான பணவீக்கத்தால் தவித்து வரும் பாகிஸ்தான் மக்களுக்கு, இந்த விலை உயர்வு மேலும் பெரும் சுமையை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

சிறிய கார்கள், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்குப் பெட்ரோல் அதிகம் பயன்படுத்தப்படுவதால், நடுத்தரக் குடும்பங்களின் பட்ஜெட் பெரிதும் பாதிக்கப்படும். டீசல் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, அதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டீசல் விலையேற்றம் விவசாயம் மற்றும் மின் உற்பத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் முன்னதாக பிப்ரவரி 1-ஆம் தேதி டீசல் விலை லிட்டருக்கு ரூ. 14 குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.