சமூக வலைதளங்களில் எப்போது என்ன வைரலாகும் என்றே சொல்ல முடியாது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் @jiva_fittnes_ என்ற கணக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தையே அதிர வைத்துள்ளது. நள்ளிரவில் ஒரு வாலிபர் தனது வீட்டின் மொட்டை மாடியில் கட்டிலைப் போட்டு நிம்மதியாகத் தூங்கச் சென்றுள்ளார். அதிகாலையில் அவர் கண் விழித்துப் பார்த்தபோது, ஒரு குரங்கு ஒரு சிறிய குழந்தையைப் போல அவர் நெஞ்சில் ஒட்டிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைக் கண்டு அப்படியே உறைந்து போயுள்ளார்.

​அந்த வாலிபர் பயத்தில் நடுங்கியபடியே, “தயவுசெய்து யாராவது மீட்புப் படையை அனுப்புங்கள்! இது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, என்னைக் கடித்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது” எனத் திக்கித் திணறி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். நெட்டிசன்கள் பலர், “வாழ்த்துக்கள், நீங்கள் இப்போது தாயாகிவிட்டீர்கள்” என்றும், “இளைஞரின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருந்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை” என்றும் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.