ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு மாதமாகப் போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இத்தாலி அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்க விமானங்கள் தனது சிசிலி தீவில் தரையிறங்க இத்தாலி அனுமதி மறுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாகக் கருதப்பட்ட நிலையில், மெலோனி அரசின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
ஏற்கனவே ஸ்பெயின் நாடு தனது வான்வெளியை அமெரிக்காவிற்கு மூடிய நிலையில், இப்போது இத்தாலியும் கைகோர்த்திருப்பது அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் போரிலிருந்து இத்தாலியைத் தனிமைப்படுத்திக் கொள்ளவே மெலோனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்புகளில் மெலோனியின் கட்சி பின்னடைவைச் சந்தித்ததும், டிரம்புடனான அவரது நெருக்கத்தால் இத்தாலி மக்கள் அதிருப்தியில் இருப்பதும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.
அடுத்த ஆண்டு இத்தாலியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், போரினால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்கவும், மக்களின் ஆதரவைத் தக்கவைக்கவும் இத்தாலி அரசு இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்தும், இத்தாலி எடுத்துள்ள இந்த முடிவு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
