மும்பையிலிருந்து கொல்கத்தாவுக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணத்தின் நடுவே ஒரு வேதனைக்குரிய சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் பயணித்த ஒருவர் அதிக அச்சம் காரணமாக கவலையில் இருந்தபோது, அருகில் இருந்த மற்றொரு பயணி அவரை அடித்துள்ளார்.
இந்த சம்பவத்தை ஒரு பயணி வீடியோ எடுத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், அச்சத்தில் இருந்த நபரை விமான ஊழியர்கள் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், வெள்ளை சட்டை அணிந்த மற்றொரு பயணி திடீரென அவரை அடிக்கிறார்.
समाज पूरी तरह सड़ चूका है pic.twitter.com/l03axtIqSc
— Adil siddiqui (azmi) (@adilsiddiqui7) August 1, 2025
“அவனால நாங்க எல்லாம் கஷ்டப்படுறோம்” என்று அந்த பயணி சண்டையை நியாயப்படுத்த முயற்சிக்கிறார். மற்ற பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள், அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள். வீடியோவின் இறுதியில், அந்த தாக்கிய பயணியை விமான ஊழியர்கள் விமானம் தரையிறங்கியதும் வெளியே அழைத்து செல்வதைக் காணலாம்.
இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “இண்டிகோ விமான நிறுவனம் இந்த பயணிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தது? ஏன் ‘நோ-ப்ளை’ பட்டியலில் சேர்க்கப்படவில்லை?” எனக் கேட்டுள்ளார்.
இதேபோல், பலரும் “இவரை விமானத்தில் பயணிக்க தடையீடு செய்ய வேண்டும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர். இண்டிகோ நிறுவனம், தாக்கிய பயணியை “பிரச்சனையுள்ள பயணி” என வகைப்படுத்தி, விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய பாதுகாப்பு துறைக்கு ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளது. இருப்பினும், இதுவரை நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமான செய்தி வெளியிடப்படவில்லை.
