கேரள மாநிலம் ஆலப்புழையில் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் தனது 15 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அந்த மாணவி படித்து வந்த பள்ளியில் 75 வயதான முதியவர் ஒருவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். அவர் அந்த குடும்பத்துக்கு அடிக்கடி உதவியாக இருந்து வந்ததாகவும், நெருங்கிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒருநாள் பள்ளிக்கு வந்த மாணவி மிகவும் சோகமாக இருந்ததை பார்த்த சக மாணவிகள் காரணம் கேட்டபோது, “பள்ளி காவலாளர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார், அதனால் நான் கர்ப்பமாக இருக்கிறேன்” என கதறி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் ஆலப்புழை வடக்கு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அந்த முதியவரை உடனடியாக கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
பின்னர் இந்த வழக்கு செங்கன்னூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி மாணவியிடம் தனியாக ரகசியமாக விசாரணை நடத்தினார். அப்போது மாணவி கூறிய தகவல் நீதிமன்றத்தையே அதிர்ச்சியடைய செய்தது. “எனது கர்ப்பத்திற்கு காரணமான என் காதலனை காப்பாற்றவே காவலாளி மீது பொய் புகார் கூறினேன்” என மாணவி ஒப்புக்கொண்டார்.
இது நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டதும், அந்த 75 வயது முதியவரை நீதிபதி உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் பொய் புகாரின் அடிப்படையில் அவரது வாழ்க்கையை சீரழித்த போலீசாரையும் நீதிபதி கண்டித்தார்.
இதனையடுத்து, நீதிமன்றம் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான வாலிபரை கைது செய்ய உத்தரவிட்டது. அந்த உத்தரவின்பேரில் செங்கன்னூர் பகுதியில் வசித்து வந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் கூடுதல் கவனத்துடன் அணுகப்பட வேண்டும் என குழந்தைகள் நல இயக்கங்கள் வலியுறுத்துகின்றன. “பொய்யான புகாரால் ஒருவர் வாழ்க்கை முற்றிலும் சீரழியலாம்” என்ற உண்மையை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிக்கொணர்ந்துள்ளது.
