பீகார் மாநிலத்தின் இளம் எம்.எல்.ஏ-வும், புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகியுமான மைதிலி தாக்கூர், தமிழில் முருகன் பாடலைப் பாடி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். 25 வயதே ஆன இவர், கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மாநிலத்தின் இளம் சட்டமன்ற உறுப்பினராக உருவெடுத்தார்.
மேலும் சிறுவயதிலிருந்தே இசை நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான மைதிலி தாக்கூர், தற்போது கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அருணகிரிநாதரின் “முத்தையருள் பத்தித் திருநகை…” என்ற கடினமான சந்தங்களைக் கொண்ட திருப்புகழ் பாடலை மிகவும் துல்லியமான உச்சரிப்புடன் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதனால் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும், தமிழ் மொழியின் மீது மைதிலி தாக்கூர் கொண்டுள்ள ஆர்வம் உண்மையிலேயே வியக்கத்தக்கது. பொதுவாகத் தமிழ் தெரியாதவர்கள் பாடும்போது உச்சரிப்பில் குளறுபடிகள் ஏற்படுவது வழக்கம், ஆனால் மைதிலி தாக்கூர் தமிழ் சொற்களைத் தெளிவாகவும், இனிமையாகவும் கையாண்ட விதம் இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “தமிழின் கடினமான பாடல்களை இவ்வளவு அழகாகப் பாடுவது பெருமைக்குரியது” எனப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். வேற்று மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் தமிழ் கலாச்சாரம் மற்றும் பக்தி இலக்கியத்தின் மீது காட்டும் இந்த ஈடுபாடு மொழி எல்லைகளைக் கடந்த ஒரு பாலமாகப் பார்க்கப்படுகிறது.
