தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை இயக்குனர் சேரன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளருக்காக விஜய்யைப் போலவே இருக்கும் ஒரு ‘டூப்’ நபர் திறந்த வேனில் வந்து வாக்கு சேகரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைப் பார்த்த இயக்குனர் சேரன், “ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே இப்படி டூப்பை வைத்துப் பிரச்சாரம் செய்வது அந்தத் தலைமைக்கே மிகப்பெரிய அவமானம்” என்று விளாசியுள்ளார்.

திருவிழாவில் போட்டோ எடுக்க கட்-அவுட் வைப்பது போல அரசியலை மாற்றாதீர்கள் என்றும், இப்படிச் சென்றால் நாளை சட்டமன்றத்திற்குள் எத்தனை ‘டூப்’கள் அமரப்போகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய சேரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். நான்கு தேர்தல்களில் தோல்வியுற்ற போதும் தளராமல், கொட்டும் மழையிலும் மக்களுக்காக ஓடோடி வந்து பிரச்சாரம் செய்யும் சீமான் எங்கே, முதல் தேர்தலிலேயே டூப்பை அனுமதிக்கும் தலைமை எங்கே என ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

மேலும், இந்த வயதிலும் முதலமைச்சர் ஸ்டாலின் இறங்கி நடந்து பிரச்சாரம் செய்வதைக் குறிப்பிட்ட அவர், ஒரு மணி நேரம் தான் அனுமதி எனச் சொல்லி விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்வதைச் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, தமிழகத்தில் நிஜமான போட்டி என்பது ‘திமுக Vs நாம் தமிழர்’ கட்சிதான் என்றும், மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.