ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய மோடி அரசு கடைபிடிக்கும் மௌனம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவி சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஒரு நாட்டின் தலைவர் படுகொலை செய்யப்பட்டபோது, சர்வதேச விதிகளைச் சுட்டிக்காட்டி இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது ‘நடுநிலைத்தன்மை’ அல்ல, மாறாக அது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் என்று விமர்சித்துள்ளார்.
மேலும் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் நம்பகத்தன்மை குறித்தும், இறையாண்மை சார்ந்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் இந்த மௌனம் உலக அரங்கில் பெரும் சந்தேகங்களை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசு ஈரானின் பதில் தாக்குதலை மட்டும் கண்டித்துவிட்டு, இவ்வளவு பெரிய படுகொலைச் சம்பவத்தைப் புறக்கணிப்பது ஒருதலைப்பட்சமானது என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, காஷ்மீர் விவகாரம் போன்ற இக்கட்டான காலங்களில் இந்தியாவுக்கு ஆதரவாக நின்ற ஈரானின் நட்புறவை மோடி அரசு மறக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சர்வதேச அமைதி மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இந்தியா தனது தார்மீகக் குரலை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
